
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் புதிய ரெயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மதுரையிலிருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் ரெயில் நிலையம்வரை தனியாக என்ஜின் ஒன்று இயக்கிச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சோதனை ஏற்பாடாகக் கடலோர காவல் படை கப்பல் ஒன்றை பாம்பன் தூக்குப்பாலத்தை திறந்து இன்று (வெள்ளிக்கிழமை) கடக்க வைக்கிறார்கள். அதன்பின்னர் மீண்டும் பாலத்தை மூடி ரெயிலை இயக்கிச் சோதனையும் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியது,
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான 11-ந் தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இருக்க வாய்ப்புள்ளது. இந்தப் புதிய பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.
இதையொட்டி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திலிருந்து கப்பல்மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார்.
தொடர்ந்து கப்பலில் சென்றபடியே பழைய மற்றும் புதிய பாலங்களைப் பிரதமர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் புதிய ரெயில் பாலத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்து அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
திறப்பு விழாவை மண்டபத்தில் நடத்துவதா அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
