
தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏழைகளுக்கு இல்லாதவரை அவர்களால் நீதியைப் பெற முடியாது என்பதால், அவர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தில்லியில் சட்ட உதவி வழங்கும் பொறியமைப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் காளை ஓவியத்தையும் சிலையையும் பரிசாக வழங்கினார். தில்லியில் சட்ட உதவி வழங்கும் பொறியமைப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
சமுதாய நடுவமுறைப் பயிற்சி முறையையும் பிரதமர் தொடக்கி வைத்தார். இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய், மத்தியச் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏழை ஒருவர் தன்னுடைய உரிமைகள் குறித்து விழிப்புணர்வு அடையாதவரை அவரால் நீதியைப் பெற முடியாது என்று குறிப்பிட்டார்.
ஆதலால் விளிம்புநிலை மக்கள், பெண்கள், மூத்தோர் ஆகியோருக்குச் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். புதிய தலைமை நீதிபதியாக வரவுள்ள நீதிபதி சூர்யகாந்த் மாநாட்டில் பேசினார். அப்போது, அண்மைக்காலத்தில் சட்ட உதவி இயக்கம் பல இடங்களுக்கும் சென்றடைந்துள்ளதாகவும், இது மேலும் அதிகப் பகுதிகளை அடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிறைகளில் தண்டனைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் விடுதலையாவோரின் மறுவாழ்விலும் அக்கறை காட்டுவதாகக் குறிப்பிட்டார்.விழாவில் பேசிய மத்தியச் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மக்களாட்சியின் தாயான இந்தியாவில் அமைப்புமுறைப் பரிமாணங்களில் காலத்துக்கேற்ற புத்தாக்கங்களைப் புகுத்தி ஜனநாயக விழுமியங்கள் வலுப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் வெற்றியே அனைவருக்கும் சமமாக நீதி வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். விழாவில் பேசிய தலைமை நீதிபதி கவாய், சட்ட உதவி இயக்கத்தின் உண்மையான வெளிப்பாடு புள்ளிவிவரங்களிலோ, ஆண்டறிக்கைகளிலோ இல்லை என்றும், அது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதில் உள்ளதாகவும் தெரிவித்தார்.



