
புதுடில்லி: ‛‛ தன்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதாருடன் வர வேண்டும் ” எனப் பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், ஹிமாச்சல்லின் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஹிமாச்சல பிரதேசத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், என்னைச் சந்திக்க மாண்டி தொகுதியிலிருந்து வருபவர்கள் ஆதார் கார்டு கொண்டு வருவது அவசியம். மக்கள் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தொகுதியில் உள்ள பிரச்னைகளை வெள்ளை தாளில் எழுதிக் கொண்டு வாருங்கள்.
ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து வருபவர்கள் மணாலியில் உள்ள வீட்டில் என்னைச் சந்திக்கலாம். மாண்டி தொகுதி மக்கள், அலுவலகத்தில் என்னைச் சந்திக்கலாம். உங்களது பணி தொடர்பாக என்னை நேரில் சந்திப்பது நலம். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு
கங்கனா ரணாவத்தின் பேட்டிக்குக் காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த விக்ரமாதித்யா சிங் கூறுகையில், மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள், அனைவரையும் சந்திப்பது நலம். சிறிய பணியோ அல்லது பெரிய பணியோ , கொள்கை ரீதியிலான பணியோ, எந்தவித அடையாள அட்டை இல்லாமல் சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



