
கேரளாவின் அழகிய துறைமுக நகரம்.
தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் அமைந்த கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்த கொச்சி நகரம், கேரளாவின் மக்கள்தொகை அடர்த்தி மிக்க பெருநகரம் ஆகும்.
கொச்சி மாநகராட்சி 1967-இல் நிறுவப்பட்டது. கிபி 14-ஆம் நூற்றாண்டு முதல் அரேபிய, ஐரோப்பிய நாடுகளுக்கு கொச்சி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் கொச்சியை அரபுக் கடலின் இராணி என அழைப்பர்.

கிபி 1503-இல் கொச்சியை போர்த்துக்கீசியர்கள் (1503–1663) கைப்பற்றினர். பின்னர் டச்சுக்காரர்கள் (1663–1795) கொச்சி நகரத்தைக் கைப்பற்றினர். 1795-இல் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர், கொச்சி இராச்சியத்தை கைப்பற்றி, தங்களது அதிகாரத்திற்குட்பட்ட சுதேச சமஸ்தானமாக ஆக்கினர்.
கேரளாவின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி முனையமாக கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகிறது. இந்தியாவின் ஆறு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கொச்சி விளங்குகிறது. இந்தியாவின் பன்னாட்டுத் துறைமுகங்களில் கொச்சி துறைமுகம் ஒன்றாகும்.
கேரளாவின் பெரும் நிதி மற்றும் வணிக மையமாக கொச்சி நகரம் விளங்குகிறது. கேரளா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி நகரம் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியக் கடற்படையின் தென்மண்டல கட்டளை மையம் மற்றும் தலைமையிடம் கொச்சியில் உள்ளது.
இந்தியக் கடலோரக் காவல் படையின் தென் மண்டல அலுவலகம் கொச்சியில் இயங்குகிறது. கொச்சியில் இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தின் கிளை உள்ளது. கொச்சியில் கொச்சி பங்குச் சந்தை, பன்னாட்டு மிளகு வணிக மையம், தென்னை வளர்ச்சிக் கழகம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மையம், திருவாங்கூர் உரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலை, இந்துஸ்தான் இயந்திரக் உபகரணங்கள் (HMT), அப்பல்லோ டயர்ஸ், பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுனங்கள், கொச்சி கப்பல் கட்டும் தளம், போன்ற பல தொழிற்சாலைகள் உள்ளது.
கொச்சி உயர் நீதிமன்றம் உள்ளதுடன், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளதுடன், சீர்மிகு நகரம் என்ற தகுதியும் கொச்சி நகரம் பெற்றுள்ளது. மேலும் இந்நகரத்தில் சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் கொச்சி தேசியச் சட்டப் பள்ளிகள் உள்ளது.
வரலாறு;
கொச்சி முதன் முதலில் மலபாரில் உள்ள பொன்னானி வட்டடத்தில் உள்ள கிராமத்தினையொட்டி பெரும்படப்பு நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 1341-ல் துறைமுகம் உருவானபோது இதன் பெயர் கொச்சி என்றழைக்கப்படலாயிற்று.
கொச்சி யூதர்கள் தங்களது வழிபாட்டுத் தலத்தில் கொச்சியை கொகின் என்றே தங்களது முத்திரையில் குறித்துள்ளனர். கொச்சி என்ற சொல்லிற்கு மலையாள மொழியில் கொச்சு ஆழி ( kochu azhi) என்பதற்கு சிறிய கடற்காயல் எனப் பொருளாகும். மேலும் மலையாள மொழியில் கச்சி என்பதற்கு துறைமுகம் என்று பொருளாகும்.
கொச்சியின் முக்கியப் பெருந்தொழில்கள் கப்பல் கட்டுதல், வீட்டு மனை கட்டுமானத் தொழில், கடல்சார் உணவுகள் பதப்படுத்துதல் மற்றும் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகும். மேலும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் பெரும்பணம் ஈட்டுகிறது.54
வெளிநாட்டு வாழ் மலையாளிகளின் வெளிநாட்டுப் பணம் இம்மாவட்டத்தின் முக்கிய வருவாயின் ஒரு பகுதியாக உள்ளது. கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்,கொச்சி நகரத்திலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ள நெடும்பச்சேரியில் உள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் இயக்கப்படுகிறது.







