NEET SS Cut – Off: 0 கட் ஆஃப் – மாணவர்கள் அதிர்ச்சி!

Advertisements

முதுகலை நீட் படிப்புகளைத் தொடர்ந்து, நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக முதுகலை நீட் படிப்புகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள், 0 பர்சன்டைலாகக் குறைக்கப்பட்டது. இதன்மூலம் நீட் தேர்வில் எதிர்மறை மதிப்பெண்களைப் பெற்றவர்கள்கூட முதுகலை மருத்துவப் படிப்பில் சேரும் நிலை ஏற்பட்டது. இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் 1000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கான ஆண்டுக் கட்டணமாக ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை தனியார் கல்லூரிகளில் வசூல் செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *