
நடிகை நயன்தாரா தன்னிடம் 5 நிமிடம் மட்டுமே கதையைக் கேட்டு விட்டு, படத்தை ஓகே செய்ததாகப் பிரபல இயக்குனர் கூறியுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே மாதிரியான கதைகளில் நடிப்பதை விட, வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுபவர் நடிகை நயன்தாரா. குறிப்பாகக் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட அழுத்தமான கதை என்றால் அதை மிஸ் பண்ணவே கூடாது என நினைக்கும் நடிகை தான் நயன்.
அப்படி நயன்தாரா நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் குறிப்பிட்ட சில படங்கள் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்த திரைப்படங்களாகும். அந்த வகையில் இயக்குனர் கோபி நயினார் எழுத்து – இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படமும் ஒன்று. 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்களின் அடிப்படை பிரச்சனை மற்றும் அரசியல் பற்றிப் பேசிய திரைப்படமாகும்.
நயன்தாரா IAS அதிகாரியாக நடித்திருந்த இப்படம், குறிப்பாக ஆழ்துளை கிணறு குறித்தும், அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றியும் பேசிய திரைப்படம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் சுனு லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். அறம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நயன்தாராவுக்கு வெற்றியைப் பெற்று தந்தது.
இந்தப் படத்தின் இயக்குனர் கோபி நயினார் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் நயன்தாராவுக்கு கதை சொல்லச் சென்றபோது என்ன நடந்தது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
நயன்தாராவை சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்ற கோபி நயினார்… 5 நிமிடம் கூடிய இந்தப் படத்தின் கதை கருவே நயனுக்கு பிடித்துப் போன நிலையில், அவர் நடிப்பதாகக் கூறியது மட்டுமின்றி, தன்னுடைய பர்சிலிருந்து 3500 ரூபாயை அவர் கையில் கொடுத்து, இவ்வளவு தான் என்னிடம் இருக்கு வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாராம். பின்னர் இந்தப் படத்தை நயன்தாராவும் KJR ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்ததாகக் கூறப்பட்டது.5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.


