Advertisements

நாட்டின் எதிர்காலத்தை நீண்டகால அடிப்படையில் வடிவமைக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் பயன்படுத்துமாறு செயலாளர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு செயலாளர்களுடனான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், உள்கட்டமைப்பு, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் எதிர்காலச் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசிய போது, தரவுகள் தேசத்தின் சொத்து, தரவுகள் வெவ்வேறு துறைகளில் தனித்தனியாக சேகரிக்கப்படுவதைத் தவிர்த்து, அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். நாட்டின் எதிர்காலம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து தொலைநோக்கு சிந்தனையுடன் செயலாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏஐ தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்றும், பயன்படுத்தும்போது, இறுதி முடிவு எடுப்பதில் மனிதர்களின் தலையீடு எப்போதும் மையமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சகங்கள் தங்களுக்குள் தனித்து இயங்கும் முறையை கைவிட்டு, இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடி இலக்குகளைத் தாண்டி, நாட்டின் எதிர்காலத்தை நீண்ட கால அடிப்படையில் வடிவமைக்க ஏஐ தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Advertisements


