
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1931-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, தென்னிந்திய திரையுலகில் நீண்டகாலமாக தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் உருவான ‘சௌகாரு’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தை இயக்குநர் எல்.வி. பிரசாத் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் பெயரே பின்னர் அவரது திரைப்பெயராக மாறி, அவர் ‘சௌகார் ஜானகி’ என அழைக்கப்பட்டார். 1952-ஆம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
1959-ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘மகிஷாசுர மர்தினி’ படத்திலும் அவர் நடித்துள்ளார். இதில் பிரபல நடிகர் டாக்டர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அவர் நடித்த பல படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கின.
திரைத்துறையில் சௌகார் ஜானகி ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக நந்தி விருதுகள், கலைமாமணி மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது சகோதரி கிருஷ்ண குமாரியும் திரைத்துறையில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சௌகார் ஜானகி விரைவில் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



