Narendra Modi: பிரதமர் மோடியின் பேச்சில் ஒரே நாளில் மாற்றம்!

Advertisements

“சொத்து மறு பகிர்வு” குற்றச்சாட்டு: பிரதமர் மோடியின் பேச்சில் ஒரே நாளில் மாற்றம்; முஸ்லிம் குறிப்பைத் தவிர்த்தார்.

அலிகார்: பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சிமீதான சொத்துக்கள் மறு பகிர்வுக் குற்றச்சாட்டை நேற்று மீண்டும் தெரிவித்தார். ஆனால் அதில் இடம்பெற்று இருந்த முஸ்லிம் குறிப்பை அவர் தவிர்த்து விட்டார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மக்களிடமிருந்து தங்கத்தையும் பணத்தையும் பறித்து முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து அளித்து விடும்” என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். முஸ்லிம்கள் நிறைந்த பகுதியான இந்தக் கூட்டத்திலும் காங்கிரசுக்கு எதிரான அதே குற்றச்சாட்டை மோடி முன் வைத்தார். ஆனால் முஸ்லிம்பற்றிய குற்றச்சாட்டை மட்டும்  தவிர்த்து விட்டார். அவர் பேசியதாவது:-

“கடந்த முறை நான் அலிகார் வந்தபோது வாரிசு அரசியல் மற்றும் தாஜா அரசியல், ஊழல் ஆகியவற்றில் ஈடுபடும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குப் பூட்டு போடுமாறு கேட்டுக் கொண்டேன். நீங்களும் வலிமையான பைட்டாகப் போட்டு விட்டீர்கள். அந்தக் கட்சிகளின் இளவரசர்களால் அதன் சாவியை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.

காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியின் ஆபத்தான நோக்கங்கள்பற்றி அலிகார் மற்றும் நாட்டு மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். அவர்கள் உங்களுடைய உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களின் மீது தங்கள் பார்வையை வைத்துள்ளனர்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸின் சாஜாதா (இளவரசர்), ‘யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், எவ்வளவு சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்?” என்பது போன்ற விவரங்களை விசாரிப்பார்கள். அத்துடன் அவர்களுடைய சொத்தைக் கையகப்படுத்தி மறு பகிர்வு செய்வதே காங்கிரஸின் நோக்கம். இதுகுறித்து எச்சரிக்க விரும்புகிறேன்.

இது மாவோயிஸ்ட் சிந்தனைக்கு நிகரானது. இது கம்யூனிஸ்ட் சிந்தனை.. இந்த அரசியல்வாதிகள் மக்களைக் கொள்ளை அடித்துப் பெரும் சொத்துக்களை குவித்துள்ளனர். அவர்கள் தங்கள் செல்வத்தை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததில்லை. இப்போது மக்களின் சொத்துக்கள் மீது அவர்களின் பார்வை விழுந்து உள்ளது”.
இவ்வாறு மோடி கூறினார்.

மாற்றம் ஏன்?

முதல் நாளில் மக்களின் சொத்துக்களை எடுத்து முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடுவார்கள் என்ற அர்த்தத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு நாடு தழுவிய அளவில் கடும் கண்டனம் எழுந்தது. தேர்தல் ஆணையத்திலும் அதுபற்றிப் புகார் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அதுகுறித்து பதில் எதுவும் அளிக்கவில்லை.

இந்த நிலையில், மறுநாள் பேசியது முஸ்லிம்கள் நிறைந்த அலிகார் நகரம் என்பதாலோ என்னவோ, காங்கிரசுக்கு எதிரான சொத்துப் பகிர்வு குற்றச்சாட்டைப் பிரதமர் மோடி மீண்டும் எழுப்பினாலும், அதில் முதல் நாள் கூறிய முஸ்லிம் மக்கள் என்ற குறிப்பை  மட்டும் தவிர்த்து விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *