சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? -நயினார் கேள்வி

Advertisements

சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், உச்ச நீதிமன்றமே கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்பதையும், தனது உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மிக முக்கியமானது என்பதையும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது என்றும். இத்தகைய சூழலில், கருக்கலைப்பு ஒரு கொலை என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கும், நாட்டின் சட்டங்களுக்கும் சவால் விடுவதற்குச் சமமாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பவர் அரசியல் சாசனத்தை பாதுகாப்பவராகவும், சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களை போதித்து, மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டதாக கடும் விமர்சனத்திற்குள்ளான ஜே.சி.டி பிரபாகர், தற்போது மீண்டும் ஒரு மதவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாக உள்ளது எனவும், மத அடையாளத்திற்காக பெண்களின் உரிமைகளுடன் விளையாடும்.

இத்தகைய பிற்போக்குத்தனமான போராட்டங்கள் நவீன சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்றும், நாட்டின் சட்டத்தை விட தனிப்பட்ட மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் சபாநாயகரின் செயல், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் சமூக நீதி பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவாலாகும் என்றும், சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *