அ.தி.மு.க. உடன் தேர்தல் கூட்டணி அமையும் – நயினார் நாகேந்திரன்!

Advertisements

நெல்லை:

நெல்லை வடக்கு மாவட்ட  பா.ஜ.க. சார்பில் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் சட்டமன்ற பா.ஜ.க. குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியது,

பெரியார்குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரியார் புத்தகத்தை நான் படிக்கவில்லை. அதைப் படித்துப் பார்த்தால் தான் அவர்குறித்து பேச முடியும்.

வள்ளுவருக்கு சிலை வைத்தால் மட்டுமே அவர் எனக்குத் தான் சொந்தம் என்று சொல்ல முடியாது. வள்ளுவர் அனைத்து தமிழருக்கும் சொந்தம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது வள்ளுவர் காலம். முதலமைச்சருக்கு 70 வயது தான் ஆகிறது.

நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடுகிறார்கள்.

இது போன்று அரசு கட்டிடங்களைக் குத்தகைக்கு விடுவதை அனுமதிக்க முடியாது. நாங்கள் தமிழக அரசுக்கு எதிரி கட்சி அல்ல. எதிர்க்கட்சி தான். தமிழக அரசு அதிகளவு கடன் வாங்கி வருகிறது. தற்போது கடன் கட்டுக்குள் தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இதே பதிலை 3 மாதங்களுக்குப் பின்னர் தமிழக அரசால் சொல்ல முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசிடம் தற்போது பணம் இல்லாத நிலையில் தான் வரி வசூல் செய்வதில் தாமதக் கட்டணம் என்பதை அறிமுகப்படுத்திக் கூடுதலாக வசூல் செய்கிறார்கள்.

வருகிற 2026 தேர்தலில் அரசின் வரி வசூல் பிரச்சனை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் போன்ற பல விஷயங்கள் எதிரொலிக்கும். மக்கள் பிரச்சினை, தொகுதி பிரச்சினைகள்குறித்து சட்டமன்றத்தில் கேட்டால் தான் நடக்கிறது.

வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை மூலமாகக் கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கப்படவில்லை.

‘ரெய்டு’ மூலம் நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாகப் பேசினாலே பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டு விடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *