Naga Chaitanya Engagement:நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்!

Advertisements

நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலைத் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். இவருடன் நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்தார். இந்நிலையில் நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்த நாக சைதன்யா, சமந்தா இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெற்றுகொண்டனர். அதன் பிறகு கடந்த சில மாதங்களாக நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவைக் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகத் தகவல் வெளியானது.

தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.’மங்கி மேன்’ என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் நாகார்ஜுனா புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்!” என்று நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *