Edappadi K. Palaniswami: மக்களை ஏமாற்றிவிட்டது திமுக!

Advertisements

கவர்ச்சியாகப் பேசி மக்களை ஏமாற்றிவிட்டது திமுக!

சேலம்: திமுக கவர்ச்சியாகப் பேசிப் பேசி மயக்கி, ஏமாற்றி தான் ஆட்சிக்கு வந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: நாம் வெற்றிப்பெற பூத் கமிட்டி பலமாக இருக்க வேண்டும். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர்களைச் சந்தித்து அதிமுக., வின் திட்டங்கள், மக்கள் பெற்ற பயன்களை மக்களிடம் நேரில் சென்று எடுத்துச் சொல்ல வேண்டும்.

2021ல் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் இடம்பெற்றன. அதில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய் புழுகி கொண்டு வருகிறார். வெறும் 10 சதவீதம் தான் நிறைவேற்றியுள்ளனர். அதனுடைய புள்ளி விவரங்களுடன், இரண்டரை ஆண்டுகால அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

திமுக கவர்ச்சியாகப் பேசிப் பேசி மயக்கி, ஏமாற்றி தான் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத மக்கள்நலத் திட்டங்களையும் செய்துள்ளது. நமது ஆட்சி மாறும்போது 85 சதவீதம் நிறைவடைந்த பணிகளைத் திமுக அரசு வந்து துவக்கி வைத்து அவர்களே நிறைவேற்றியதாகக் கூறுகின்றனர்.

மேட்டூரில் 36 அடி தான் தண்ணீர் உள்ளது. பருவமழை பொய்த்து போய்விட்டது. அணையில் நீர் இருந்தால் தான் குடிநீர் கிடைக்கும். இன்னும் 5 அடிகள் குறைந்தால் குடிநீருக்கு பிரச்னை ஏற்படும். இதுவே 24 மாவட்ட மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் இதெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் தூங்கி கொண்டிருக்கிறார்.

தன் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று குறியாக உள்ளனர். தண்ணீர் பிரச்னை வருவதற்கு முன்பாகவே கூறிவிட்டேன். இனியாவது விழித்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடினம்தான். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணி முறிவு ஏன்?பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகியது தொடர்பாகப் பேசிய பழனிசாமி, ”உங்கள் (கட்சியினர்) விருப்பத்தின் பேரில் தான் பா.ஜ., உடனான கூட்டணியை விட்டு வெளியேறினோம். சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி அதிமுக என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *