N. S. Krishnan: கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த தினம்..

Advertisements

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். சிரித்து வாழ வேண்டும்.. இதெல்லாம் நாம் சந்தோசப்படுவதற்கு மட்டுமல்ல சிரித்தால் சிதறி ஓடும் நோய்கள்.

பல தருணங்களில் நாம் சிரிக்க பல சம்பவங்கள், நிகழ்வதுண்டு. சிரிப்பதற்கு சம்பவங்கள் மட்டுமல்லாது நாம் படிக்கும் நாளிதழ்கள் , சிறிய துணுக்குகள் இருக்கும். அதிலும் திரையில் சில காட்சிகளைக் கேட்டும், கண்டும்  நாம் வயிறு குலுங்கச் சிரிப்போம். அந்தக் காலத்தில் மேடை நாடகங்கள் அரங்கேரிய நாளிலிருந்தே சிரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவைக் காட்சிகள் அமைப்பது வழக்கம்.

பொழுது போக்கிற்காக மட்டும் நாடகங்களோ, சினிமாவோ பார்ப்பதில்லை. நம் கவலைகளை மறப்பதற்கும் தான் நாம் திரையரங்குகளுக்குச் செல்கிறோம். அப்படி சினிமா பார்க்கும் நம்மைச் சிரிக்க வைக்க நகைச்சுவை நடிகர்கள் அன்று முதல் இன்று வரை திரை வானில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களில் முதல் இடத்தில் , அதுவும் நம் எல்லோர் மனதிலும் அழியா புகழோடும், பெயரோடும் இருப்பவர்  தான் கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்  நாடக மேடைகளிலும் ,பின்பு வெள்ளித்திரையிலும் தன்னுடைய தன்னிச்சையான நகைச்சுவையால் தனி முத்திரை பதித்தவர். இவருடைய நகைச்சுவை கருத்தாழம் மிக்கதாகவும், நாட்டுப்பற்றும், நல்ல வாழ்வியல் அறிவுரைகள் மக்களுக்கு எடுத்துக் கூறுவதாக அமையும்.அறிவியல் சிந்தனையும்  கருத்துக்களும் இருக்கும்.

இத்துணை சிறப்பு மிக்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்  1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி நாகர்கோவிலில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால், குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாகத் தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார்.

இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். இவர் பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார்.

பின் வில்லுப்பாட்டுக் கலைஞராகத் தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது.இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையைச் சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

இவர் பல நாடகங்களை எழுதி இயற்றியுள்ளார். இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதுள்ள ஈர்ப்பு இவருக்குக் குறையவில்லை. இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் ‘சதிலீலாவதி’. சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, ‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு ‘கலைவாணர்’ பட்டம் வழங்கப்பட்டது.

நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய கலைவாணர் தனது 48வது வயதில் (1957) மறைந்தார்.
தமிழ்நாடு அரசு என். எஸ். கிருஷ்ணன் நினைவாகச் சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் எனப் பெயர் சூட்டியுள்ளது. இந்தக் கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *