N. Rangaswamy: மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் நம்பிக்கை உள்ளது!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 13 முறை புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது புதுவை சட்டசபையில் மாநில அந்தஸ்து தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் 14-வது முறையாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் புதுவை அரசின் தீர்மானத்துக்குப் பதில் அளித்து மத்திய அரசுக் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாநில அந்தஸ்து கிடையாது, புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் பதில் புதுவை ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனப் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கூறிய அவர், தற்போதைய நிலை தொடரும் என மத்திய அரசு தெரிவித்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றார்.

மேலும், டெல்லிக்கு எம்எல்ஏக்களை அழைத்துச் சென்று, மாநில அந்தஸ்து கோரி பிரதமர், உள்துறை மந்திரியைச் சந்தித்து வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *