
துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு (37). திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் திருவான்மியூர் அவ்வை நகர் அருகே 3 சக்கர பேட்டரி வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது, 2 பைக்கில் வந்த 4 நபர்கள், வாகனத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றனர்.
திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் டெல்லிபாபு, அவரது நண்பர் குப்புசாமி ஆகியோர் கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட வழக்கில் ஈடுபட்டு வந்தனர். திருமணத்துக்கு பிறகு திருந்தி வாழ்ந்து வருகின்றனர். தற்போது, சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த லேஅருண், கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் அவரை கடந்த வாரம் கண்ணகி நகர் போலீசார் அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதில், குப்புசாமிதான், தன்னை போலீசாரிடம் போட்டு கொடுத்ததாக நினைத்து அவரை லேஅருண் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதுபற்றி தனது நண்பர் டெல்லி பாபுவிடம் குப்புசாமி கூறியுள்ளார்.
இதையடுத்து டெல்லி பாபு, குப்புசாமி ஆகியோர் கடந்த 27ம் தேதி லேஅருணை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆத்திரமடைந்த லேஅருண், டெல்லி பாபுவை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களான பூபேர், குபேரன், நவீன் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் பதுங்கியிருந்த பூபேர், குபேரன், நவீன், லேஅருண் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

