பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் அண்ணன் தலையில் கல்லை போட்டு தம்பி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மூட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அம்சவேணி, இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (வயது 29), மோகன்ராஜ்(25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து அய்யாசாமி பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே தந்தையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர இரண்டு மகன்களும் நேற்று திப்பம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தந்தையிடம் சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே அய்யாசாமியின் மகன்கள் இருவரும் திப்பம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தம்பி மோகன்ராஜ் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் காவல் துறையினர் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தம்பி மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் சாலை ஓரத்தில் அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.