
இளையராஜாவின் இசை வெள்ளம் அனைவரையும் சிவபக்தியில் ஆழ்த்தி விட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரைத் திருவிழாவில் பிரதமர் நரேந்திர கலந்துகொண்டார்.
விழாவில் பரத நாட்டியம், தேவாரம் ஓதுதல், இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன. அப்போது பார்வையாளராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவின் இசையைக் கேட்டுக் கைதட்டி மகிழ்ந்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, இராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில், இளையராஜாவின் பக்தி இசை ஆகிய சூழல் அனைவரையும் சிவபக்தி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டதாகத் தெரிவித்தார்.
சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசியா முழுவதும் வணிகத் தொடர்பையும், அரசியல் தொடர்பையும் கொண்டிருந்ததாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக இராஜேந்திர சோழ மன்னனைப் பெருமைப்படுத்தும் வகையில் நாணயத்தைப் பிரதமர் வெளியிட்டார். திருமுறை இசை என்னும் நூலையும் வெளியிட்டார்.


