
தென்னமெரிக்க நாடான அர்ஜெண்டினாவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எட்டு நாள் சுற்றுப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.
கானா, டிரினிடாட் டொபக்கோ ஆகிய நாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு தென்னமெரிக்காவில் உள்ள அர்ஜெண்டினாவுக்குத் தனி விமானத்தில் சென்று இறங்கினார்.
தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள விமான நிலையத்தில் அர்ஜெண்டினா அதிகாரிகள் பிரதமருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர்.
அதன்பின் அர்ஜெண்டினா வாழ் இந்தியர்கள் பிரதமருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். அர்ஜெண்டினா அதிபர் சேவியர் மிலேயின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அதிபர் சேவியர் மிலே தலைமையிலான உயர்நிலைக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினர்,
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்த உள்ளனர். பாதுகாப்பு, வேளாண்மை, சுரங்கம், எண்ணெய் இயற்கை எரிவாயு, புதுப்பிக்கவல்ல எரியாற்றல், வணிகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பிரதமர் பேச்சு நடத்த உள்ளார்.
