M. K. Stalin: 502 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறப்பு!

Advertisements

பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைக் காணொளி காட்சிமூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைக் காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார். அத்துடன், 732 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்களையும் முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,374 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 80 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டடங்களுக்கு முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *