
பாட்னா: பிரதமர் மோடியை சிறையில் அடைப்போம் என்று கூறுவதா? என், லாலு பிரசாத் யாதவின் மகள் நிஷா பாரதிக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர் ஜே டி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி, பீகார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதியில் ஆர் ஜே டி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் கட்சியின் அறிக்கை உடன் ஒப்பிட்டு பேசியதற்கும் பிரதமர் மோடியை அப்போது அவர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
“நாங்கள் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிப்பது போன்றவை பற்றி பேசுகிறோம். ஆனால் பிரதமர் மோடி பீகார் வரும்போது எல்லாம் எங்கள் குடும்பத்தை ஊழல் குடும்பம் என குற்றம் சாட்டுகிறார்.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்தால் பிரதமர் மோடி உட்பட அனைத்து பாஜக தலைவர்களும் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருப்பார்கள்” என்றும் மிசா பாரதி கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவாடே, “மிசா பாரதி எதிர்க்கட்சிகளின் பிரச்சார தரத்தை தரம் தாழ்த்தி விட்டார்” என்று குற்றம் சாட்டி இருக்கிறார். “பயங்கரவாதிகளையும் ஊழல்வாதிகளையும் சிறையில் அடைப்போம் என்று சபதம் ஏற்பதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்கி வருவதாகவும்” அவர் விமர்சித்தார்.
“மோடி ஜி மார்க்கா”என்று பேசும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் இழிவான நிலைக்கு சென்று விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் “மிசா பாரதி தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் முதலில் சிந்திக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.
“இவர்கள் எத்தனையோ விதமான ஊழல்களில் சிக்கித் தவிக்கிறார்கள். இது நாங்கள் சொல்லும் வெறும் குற்றச்சாட்டு அல்ல. நீதிமன்றம் இவர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளது. அவர் இது போன்ற கருத்துக்களை சொல்லி ஜனநாயகத்தையும் நீதி துறையும் கேலி செய்வதை நிறுத்த வேண்டும்” என்றார்.
கடந்த ஜனவரி மாதம் பண மோசடி வழக்கில் நிஷா பாரதி அவருடைய தாயாரும் முன்னாள் பீகார் முதல்வருமான ராபரி தேவி ஆகிய இருவரின் பெயரையும் தனது முதல் குற்ற பத்திரிகையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊழல் வழக்கில் ராப்ரிதேவிக்கும் மிசா பாரதிக்கும் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம் பின்னர் பிப்ரவரி 28ஆம் தேதி வழக்கமான ஜாமீன் வழங்கியது.


