
நெல், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட 14 வகை வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நடப்புச் சந்தைப் பருவத்தில் 14 வகைப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை 2441 ரூபாயாகவும், முதல் தர நெல்லுக்கு 2461 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட ஒரு குவிண்டால் நெல்லுக்கு 72 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் நெல்லை விளைவிக்க அடக்கச் செலவு 1627 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு, அதனுடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குவிண்டால் துவரை விலை 8450 ரூபாயாகவும், பாசிப்பயறு 8780 ரூபாயாகவும், உழுந்து 8200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை 7517 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணப்பயிரான பருத்தி ஒரு குவிண்டால் 8267 ரூபாயாகவும், நீண்ட இழைப் பருத்தி 8667 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருத்தி விலை முந்தைய ஆண்டைவிட 557 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது..


