மெரினாவில் திறக்கப்படும் ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரை.. எல்லோருக்கும் அனுமதியா?  பின்னணி என்ன?

Advertisements
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீலக்கொடி கடற்கரையை, இன்னும் சில வாரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணிக்க உள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீலக்கொடி கடற்கரை வளாகத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மரக்கன்றுகள் நடப்பட்டு, விளையாட்டு பகுதி நிறைவடைந்துள்ளதாக வும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, மூங்கில் சாய்வு நாற்காலிகள், குப்பைத் தொட்டிகள் அமைக்கும் பணி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி மற்றும் தியானத்திற்கான மூங்கில் தளம் அமைக்கும் பணி போன்ற இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கட்டுமானப் பணிகளை முடித்து, அடுத்த கட்டமாக தண்ணீர் பரிசோதனையை முடித்து வரை படங்களுடன் கூடிய தகவல் பலகைகளை அமைத்து வருகிறது. இந்த கடற்கரையை பராமரிக்கும் ஒப்பந்தம் ₹6 கோடிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி நீலக்கொடி மண்டலமாக மாற்றப்படவுள்ளது. இங்கு சாய்ந்த நாற்காலிகள், சிற்றுண்டிச்சாலை, உடற்பயிற்சி உபகரணங்கள், கண்காணிப்பு அமைப்பு மற்றும் நவீன நடைபாதைகள் போன்ற வசதிகள் ₹6 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளன. வணிகர்கள் இங்கு கடைகள் அமைக்க அனுமதி இல்லை. மெரினா கடற்கரை முழுவதும் இதேபோன்று படிப்படியாக மறுசீரமைக்க  திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் மே மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரை, ப்ளூ ஃபிளாக் எனப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் சான்றிதழை பெற உள்ளது. இந்த சான்றிதழை பெறுவதற்கான டெண்டர் கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. ப்ளூ ஃபிளாக் சான்றிதழ் என்பது தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் தரம் போன்ற சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், “நீலக்கொடி கடற்கரை வளாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மரக்கன்றுகள் நடப்பட்டு, விளையாட்டுப் பகுதி நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *