ஜெம் வீரமணி போக்சோ வழக்கு – சாந்தி, மகேந்திர சிம்ஹனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

‘ஜெம் கிரானைட்’ நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வீரமணி, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் சம்பவங்களுக்கு சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் தங்களது வீட்டை பயன்படுத்த அனுமதித்ததாக காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2003ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போனில் இருந்து வீரமணி தொடர்பான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

வீரமணி மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை போலீசார் விசாரித்து முடித்த நிலையில், நீதிமன்றம் அந்த முடிவை ஏற்க மறுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் விசாரணை தொடங்கிய பின்னரே வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வீரமணியும், அவருக்கு நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் சிலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரமணி கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக புழல் சிறையில் வைத்து அவரிடம் 3 நாட்கள் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இறுதியாக ஒருமுறை அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, இருவரிடமும் காவல்துறை விரிவான விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையின் மூலம் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் சில தகவல்கள் மற்றும் நபர்கள் குறித்து விவரங்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *