மன்னார்குடி சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 42 பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் 254 .50 கிமீ தூரத்திற்கு ரூ 3. 52 கோடி மதிப்பில் தூர்வாரும் பணியைத் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 57 சட்டமன்ற தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் 5338. 68 கிமீ தூரத்திற்கு 919 சிறப்பு தூர் வாரும் பணிகளுக்கு ரூ 110 கோடி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத் திருவாரூர் மாவட்டத்தில் காவிரி நீர் தங்கு தடையின்றி செல்ல வசதியாகக் கடைமடை வாய்க்கால்களை தூர் வாரும் பணிகள் இன்று துவங்கியது.
நீர் வளத் துறையின் மூலம் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 197 பாசன வாய்க்கால்கள், கிளை ஆறுகள், வடிகால்கள் 1296. 99 கிமீ தூரத்திற்கு 17.62 கோடி மதிப்பில் தூர் வாரப் படுகிறது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 42 பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் 254 .50 கிமீ தூரத்திற்கு ரூ 3. 52 கோடி மதிப்பில் தூர் வாரப்படுகிறது. இதன் மூலம் 64502 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிலையில் மன்னார்குடி பாமணி ஆறு கைலாசநாதர் பிரிவு வாய்க்காலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளைத் துவக்கி வைத்தார். நீர்வளத்துறை வெண்ணாறு வடிநிலக்கோட்டை தஞ்சை செயற்பொறியாளர் திலீபன் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் துவங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


