Mangaluru Medicos Suicide: உடல் பருமனாக இருந்ததால் மருத்துவ மாணவி தற்கொலை!

Advertisements

உடல் பருமனாக இருந்ததால் மருத்துவ மாணவி 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

மங்களூரு: கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் பெலகாவி மாவட்டம் அதானி ஆகும். இவரது தந்தையும் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

Advertisements

பிரக்ருதி ஷெட்டி, கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார். அவரது அறை முதல் தளத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி ஷெட்டி தங்கும் விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நேற்று காலை இதை அறிந்த சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், தற்கொலை செய்த மாணவி பிரக்ருதி ஷெட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், மருத்துவ மாணவி பிரக்ருதி ஷெட்டி அதிகாலை 3 மணி அளவில் தான் தங்கியிருந்த முதல் தளத்தின் அறையில் இருந்து தங்கும் விடுதியின் 6-வது மாடிக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள தனது தோழி ஒருவரின் அறை முன்பு செல்போன், காலணியை கழற்றிவிட்டுவிட்டு, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு தற்கொலை செய்வதற்கு முன்பு பிரக்ருதி ஷெட்டி தற்கொலைக்கான காரணம் பற்றி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி எடுத்துக்கொண்டனர். அந்த கடிதத்தில் பிரக்ருதி ஷெட்டி கூறியிருப்பதாவது:-

எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது. நான் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பினேன். ஆனால் எனது உடல் பருமனாக இருந்ததால் நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். மேலும் உடல் பருமன் காரணமாக நான் அழகாக இல்லை. உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

மேலும் அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து நான் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *