
நான் நீதித்துறையை மதிக்கிறேன். இந்த உத்தரவைப் பிறப்பித்தவரின் தீர்ப்பை நான் ஏற்கவில்லை; அதை ஏற்கமாட்டேன். ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன் என்று முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:மேற்குவங்காளத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பின் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்துசெய்து உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட், 1993-ம் ஆண்டு சட்டத்தின்படி ஓ.பி.சி. புதிய பட்டியலைத் தயாரிக்குமாறு மேற்குவங்காள மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அம்மாநிலத்தில் 5 லட்சம் ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டோம் எனக் கூறிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடரும். இந்த விவகாரம் தொடர்பாகச் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், நான் நீதித்துறையை மதிக்கிறேன். இந்த உத்தரவைப் பிறப்பித்தவரின் தீர்ப்பை நான் ஏற்கவில்லை; அதை ஏற்கமாட்டேன். ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன். அவர்களுக்கு என்னைத் தெரியாது. நான் அவர்களின் விருப்பத்துக்குத் தலைவணங்குபவள் அல்ல.
சட்டப்படி ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். நாங்கள் ஆய்வுகளை நடத்தினோம். பல அறிக்கைகளைச் சமர்ப்பித்த குழுவின் தலைவராக உபென் பிஸ்வாஸ் இருந்தார். அப்போதும் கூட இந்த விஷயத்தில் கோர்ட்டில் வழக்குகள் இருந்தன. ஆனால் மேல்முறையீடு செய்தவர்கள் அந்த வழக்குகளில் தோல்வி அடைந்தனர் எனத் தெரிவித்தார்.



