Mamallapuram: காவலாளி மீது தாக்குதல் – 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

வாகன நிறுத்துமிட காவலாளியை தாக்கிய விவகாரத்தில் 4 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார் ஒன்று அங்கு நோ என்ட்ரி வழியாகச் சென்று காரைப் பார்க் செய்ய முயன்றது.

அப்போது அங்குப் பணியிலிருந்த தனியார் காவலாளி, நோ என்ட்ரி வழியாகக் கார் செல்லக் கூடாது என்று கூறி காரை வழி மறித்து நின்றார். ஆனால் அவர்மீது ஏற்றுவது போல் சென்று நோ என்ட்ரி வழியா அந்தக் கார் செல்ல முயன்றது.

இதனால், காரில் வந்தவர்களை நோக்கிக் காவலாளி கேள்வி எழுப்பியதால், ஆத்திரமடைந்த பெண் காரிலிருந்து இறங்கி காவலாளியை தாக்க, அவருடன் இணைந்து காரில் இருந்த மற்றொரு பெண், 2 ஆண்கள் என 4 பேரும் சேர்ந்து அந்தக் காவலாளியை கடுமையாகத் தாக்கினர். மேலும், காவலாளியிடம் இருந்த 2 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்தப் பைப் உடையும் அளவுக்கு அவரைத் தாக்கினர். இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில் காவலாளியை சரமாரியாகத் தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ ஆதாரங்களை வைத்து அவர்கள் யாரெனக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *