
பாஜகவுக்கு ரூ.6000 கோடி நன்கொடை கிடைத்துள்ளது எனவும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைச் சமர்ப்பித்த நிலையில் நேற்று இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டது, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி 15-ம் தேதிவரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பா.ஜ., காங்கிரஸ், அ.தி.மு.க., – – தி.மு.க., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணமுல் காங்., – பி.ஆர்.எஸ்., சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள்உள்ளன.
இதற்கிடையே, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில், 2024 ஜனவரி வரை, மொத்தம், 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள, 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், பா.ஜ., 6,566 கோடி ரூபாயும், காங்கிரஸ் 1,123 கோடி ரூபாயும், திரிணமுல் காங்கிரஸ் 1,092 கோடி ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்றுள்ளதாக ஏ.டி.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதைச் செய்ய ஐடிக்கு பாஜகதான் அறிவுறுத்தினர். கிட்டதட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. எப்படி தேர்தலுக்குச் செல்வது? எங்கள் கணக்குகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் அவர்களின் கணக்குகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சமதர்மம் எங்கு உள்ளது? இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மை வெளிவராத பட்சத்தில் பாஜகவின் கணக்குகளையும் முடக்க வேண்டும். பாஜகவுக்கு ரூ.6000 கோடி நன்கொடை கிடைத்துள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.


