
Mallikarjun Kharge | M. Thambi Durai
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதில் அளித்த அதிமுக எம்.பி. தம்பிதுரை…
சென்னை: சுதந்திர தினவிழாவை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது பிரதமர் மோடி தனது உரையின்போது, “அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டின் சாதனைகளைப் பட்டியலிடுவேன்” எனக் கூறினார்.
இதற்குக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது. 2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்” எனக் காட்டமாகக் கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, அதிமுக எம்.பி. தம்பிதுரை பதில் அளித்துக் கூறுகையில், “பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை; இந்தியாதான் அவரது குடும்பம்; செங்கோட்டைதான் அவரது வீடு; அதனால் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு, அவரது வீட்டில்தான் தேசிய கொடி ஏற்றுவாரெனக் காங்கிரஸ் தலைவர் கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்” என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.




