மகா கும்பமேளா செல்ல 300 கி.மீ. தூரம் வரிசை கட்டிய வாகனங்கள்!

Advertisements

மகா கும்பமேளா:

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது.

கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதிவரை இந்நிகழ்வு நடைபெறும்.

உலகின் மிகப்பெரிய இந்தக் கலாசார, ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவுக்கு ரெயில் மற்றும் சாலை மார்கமாகப் பலவேறு இடங்களிலிருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு வரும் வழியில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.

இதை உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாமெனப் பலரும் குறிப்பிடுகின்றனர். 48 மணி நேரமாக வாகனங்கள் காத்துக்கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சனி, ஞாயிறுகளில் அதிகப்படியான மக்கள் மகா கும்பமேளாவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

டிராபிக் ஜாம்:

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பிரயாக்ராஜ் நோக்கிப் படையெடுத்தனர்.

இதனால் உத்தரப் பிரதேச எல்லைவரை சுமார் 200 முதல் 300 கிலோமீட்டருக்கு வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் யாரும் பிரயாக்ராஜுக்குள் சாலை மார்க்கமாக வர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

பிரயாக்ராஜை இணைக்கும் வாரணாசி, ஜான்பூர், மிர்சாபூர், கௌசாம்பி, பிரதாப்கர், ரேவா மற்றும் கான்பூர் ஆகிய அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் வாகனங்களின் நீண்ட வரிசை மட்டுமே தென்படுகிறது.

மக்கள் அவதி:

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மணிக்கணக்கில் பசியையும் தாகத்தையும் எதிர்கொள்கின்றனர். நகரத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் தனித்தனி வாகன நிறுத்துமிடங்களை நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான பார்க்கிங் இடங்கள் நிரம்பியதால், வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சிவில் மற்றும் போக்குவரத்து போலீசாரைத் தவிர, துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் அறிவுரை:

மத்தியப் பிரதேசத்தின் கட்னி, ஜபல்பூர், மைஹார் மற்றும் ரேவா மாவட்டங்களில் சாலைகளில் பல ஆயிரம் கார்கள் மற்றும் டிரக்குகள் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில் கட்னி பகுதியிலிருந்து மத்தியப் பிரதேச- உத்தரப் பிரதேச எல்லைவரை 250 கிமீ தூரத்திற்கு மோசனமான டிராபிக் நிலவுகிறது.

சூழலைக் கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகின்றனர். அனைவரையும் திருப்பச் செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம்மூலம் பிரயாக்ராஜ் வந்து மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு:

போக்குவரத்து நெரிசல் குறித்து ஆளும் பாஜக அரசைச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“நெரிசலில் சிக்கிக் கொண்ட மக்கள் மணிக்கணக்கில் தங்கள் வாகனங்களிலேயே அடைந்து கிடக்க நேர்கிறது. பெண்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட இடமில்லை.

சாலைகளில் மயங்கி விழுபவர்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஏற்பாடும் இல்லை. பக்தர்களின் மொபைல் போன்களில் பேட்டரி தீர்ந்து போனதால், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தொடர்பு மற்றும் தகவல் இல்லாததால், மக்களிடையே பதட்டம் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த எந்தப் பொறுப்பான அமைச்சரோ அல்லது அதிகாரியோ இருப்பதாகத் தெரியவில்லை.

முதலமைச்சர் முழுமையான தோல்வியடைந்துவிட்டார். துணை முதலமைச்சர் மற்றும் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல முக்கிய அமைச்சர்களும் காணவில்லை. பொதுமக்களிடையே இருந்திருக்க வேண்டியவர்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

இரவும் பகலும் பசியும் தாகமும் தாங்காமல் களத்தில் நிற்கும் காவலர்களுக்கும், ஊழியர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீருக்கு எந்த ஏற்பாடும் இல்லை என்று தெரிகிறது.

அதிகாரிகள் அறைகளில் அமர்ந்து உத்தரவுகளை வழங்குகிறார்கள், ஆனால் களத்தில் இறங்குவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *