M. K. Alagiri: மு.க.அழகிரி விடுதலை!

Advertisements

மதுரையில் தாசில்தாரை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. புகார் தொடர்பாக மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராகத் தாசில்தார் காளிமுத்து தரப்பில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணைமேயராகப் பொறுப்பு வகித்த மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில், பொன்னம்பலம், தமிழரசன், நீதித்தேவன், சேகர், மயில்வாகன், ராமலிங்கம், சோலை நாகராஜா, வெள்ளையா பாலகிருஷ்ணன், அய்யனார், கருப்பண்ணன், பாலு, போஸ் உள்பட 21 பேர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *