
Kamarajar Memorial Day:
1940ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான அவர், 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று (அக்.02). கருப்பு காந்தி என்றழைக்கப்பட்ட காமராஜர் காந்திஜி பிறந்த நாள் அன்றே மறைந்தார்.
கர்ம வீரர், கிங் மேக்கர், ஏழைப் பங்காளர் என்றும் போற்றப்பட்ட காமராஜர், விருதுநகரில் பிறந்தார்.
இளம் வயதிலேயே தேசிய இயக்கத்தில் பங்கேற்றார். பலமுறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுக் காலம் சிறை வாசம் அனுபவித்தார்.
1940ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான அவர், 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
9 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்த காமராஜர், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காகப் பெரும் தொண்டாற்றினார். ஏழைப் பிள்ளைகளின் நலனிற்காக மதிய உணவு திட்டத்தினை செயல்படுத்தினார்.
1964ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். எளிமை, தியாகம், அமைதி, அடக்கம் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அவர் சென்னையில் காலமானார்.
சாத்தூர், சாத்தூர்-அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் ஜெயித்து எம்எல்ஏ ஆகியிருக்கிறார்.
சிறுவயதில், காமராஜ் தனது மாமாவின் உணவுக் கடையில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் அவர் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தைப் பற்றிய பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். காமராஜர் தினசரி செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம் நிலவும் அரசியல் சூழ்நிலைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ஜாலியன்வாலாபாக் படுகொலை அவரது வாழ்க்கையில் தீர்க்கமான திருப்புமுனையாக இருந்தது – அவர் தேசிய சுதந்திரத்திற்காகப் போராடவும், அந்நிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் முடிவு செய்தார்.
1920 இல், அவருக்கு 17 வயதாக இருந்தபோது, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். காங்கிரசில் முழுநேர அரசியல் ஊழியராகச் சேர்ந்தார்.


