அதிகாலையில் தொடங்கிய அமெரிக்காவின் வெறியாட்டம், ஈரானின் எண்ணெய் கப்பல்களைச் சாம்பலாக்கியது, பதிலுக்கு ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், மறுபுறம் சவுதி அரேபியாவை நோக்கிப் பாய்ந்த ஹவுதிகளின் மிரட்டலான ஏவுகணை அலைகள் என மத்திய கிழக்கு பிராந்தியம் இப்போது ஒரு உண்மையான போர்க்களமாகவே மாறிவிட்டது. அங்கே அடுத்தடுத்து என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் முழுமையாகப் பார்ப்போம் வாருங்கள்.!
இன்று அதிகாலையிலேயே மத்திய கிழக்கில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்று அரங்கேறியிருக்கிறது. அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைத்து கடந்த இரண்டு நாட்களாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. (IRGC) ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இந்தத் தாக்குதல்களை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடுவழியில் தடுத்து அழித்துவிட்டாலும், தங்கள் மீது கைவைக்க ஈரானுக்கு எப்படி தைரியம் வந்தது என்று அமெரிக்கா உச்சி குளிர்ந்து போயிருக்கிறது.
இதற்குப் பதிலடியாகத்தான் அமெரிக்கா தன் கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. அமைப்பிற்கு நிதி ஆதாரம் அளித்து வந்த 5 பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அதிரடியாகத் தாக்கி அழித்துள்ளன. தாக்கும் முன் கப்பலில் இருந்த மாலுமிகள் வெளியேற எச்சரிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஓய்தால் போதும் என்று பார்த்தால், மறுபுறம் சவுதி அரேபியா – ஏமன் எல்லையில் புதிய பதற்றம் வெடித்திருக்கிறது. ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி படைகள், சவுதி அரேபியாவின் அல்-வடியா எல்லை அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், ஆயுதங்களுடன் நின்றிருந்த வாகனங்கள் மீது ஏவுகணை பாய்ந்து சிதறுவதும், வானுயரத்திற்கு கரும்புகை எழும்புவதும், பதறிப்போன வீரர்கள் தப்பியோடுவதும் பார்க்கவே பதைபதைக்க வைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்த போர் நிறுத்தம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், ஹவுதி படைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்களின் தளங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே இரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 73 பேர் காயமடைந்துள்ளனர். பல எரிசக்தி நிலையங்களில் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உஷாரான சவுதி அரேபியா, “எங்கள் இறையாண்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்; ஹவுதிகள் தங்கள் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் மோதல், ஜோர்டன் மீதான தாக்குதல், ஹவுதிகளின் கைவரிசை என மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போரின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலவரம் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற உச்சக்கட்ட பதற்றம் அனைவரிடத்திலும் நிலவி வருகிறது..

