
மக்களவை சபாநாயகராகப் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
18-வது மக்களவை சபாநாயகராகப் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். மக்களவையில் அதிகாரமிக்க சபாநாயகர் பதவிக்குத் தொடர்ந்து 2-வது முறையாக அவர் தேர்வாகி உள்ளார்.
பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாகப் போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதில் சபாநாயகராகத் தேர்வானதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகரான பெருமையைப் பெற்றுள்ளார் ஓம் பிர்லா.
இவர் ராஜஸ்தானின் கோட்டா தொகுதியிலிருந்து 3-வது முறையாக எம்.பியாகத் தேர்வுச் செய்யப்பட்டவர் ஆவார்.
48 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதற்கு முன் 1952, 1967, 1976 ஆகிய ஆண்டுகளில் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றிருந்தது.
புதிய சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வானதை தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்குப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்துச் சென்று அவருக்குக் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ” நீங்கள்( ஓம் பிர்லா) இரண்டாவது முறையாக இந்த நாற்காலியில் அமர்ந்திருப்பது அவையின் அதிர்ஷ்டம்” என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

