Lok Sabha Elections 2024: திமுகவில் இணைந்த விஜய் ரசிகர்கள்!

Advertisements

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் அதிமுக, மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற ஆலோசகர் முத்துராஜ் தலைமையில் அதன் நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில்  நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களைச் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.

இதுபோல் 59 வது வார்டு பகுதியில் உள்ள அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, அமுமுக உள்ளே கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களையும் அமைச்சர் கீதா ஜீவன் ஷால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். இதுபோல் மாற்றுத்திறனாளி சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி 27ம் தேதிவரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டு, வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு மார்ச் 30ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு எல்லை கோடுகள் வரையும் பணி இன்று துவங்கியது.

கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட உள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் 100 மீட்டர் 200 மீட்டர் இடைவெளிக்கு எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நஞ்சப்பா ரோடு செல்லும் சாலையிலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையிலும், அவிநாசி சாலை செல்லும் வழியிலும் 100 மீட்டர் 200 மீட்டர் இடைவெளிக்கு எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் இந்தக் குறிப்பிட்ட எல்லைவரை தொண்டர்களுடன் வரலாம் எல்லைக்கோடுகளை கடந்து வரும்பொழுது வேட்பாளர் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை இசிஆர் சாலை மற்றும் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி நீலாங்கரை சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ஆனந்தபாபு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரதீப் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் நீலாங்கரை போலீசார் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

இ சி ஆர் சாலையில் துவங்கிய இந்தக் கொடி அணிவகுப்பு பேரணி ஈஞ்சம்பாக்கம் பெத்தல் நகர் பகுதி முழுவதும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று ஈஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே முடிந்தது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எந்த ஒரு அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *