Lok Sabha Elections 2024: தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!

Advertisements

வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் இன்று ஆர்வமுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சென்னை: பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி தமிழ்நாட்டில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதி, விளவங்கோடு சட்டசபை தொகுதி, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி ஆகியவற்றில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்வதற்காக அரசு அலுவலகங்களில் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்குப் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியாகக் கட்டா ரவி தோகா மற்றும் உதவி தேர்தல் அதிகாரி எஸ்.தனலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு ஷெனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கே.ஜெ. பிரவீன்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவிதா நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

இதேபோல் தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.பி. அமித் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி பி.எம்.செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தென் சென்னையில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் இன்று ஆர்வமுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு பெறப்படும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாகப் போடப்பட்டுள்ளது. அலுவலகத்தைச் சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் வாகனம் மற்றும் 2 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கலின்போது விதிமுறைகளைப் பின்பற்றும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் கமிஷன் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. மனுதாக்கல் செய்ய வரும்போது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

வேட்பாளர்கள் நேரடியாக அல்லது முன்மொழிபவர் வழியே வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். தபாலில் வேட்பு மனுவை அனுப்ப கூடாது. முன்மொழிபவர் அல்லாத நபரிடம் கொடுத்து அனுப்பினாலும் மனு பெற்றுக்கொள்ளப்படாது.

வேட்பு மனுவை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம். ஆனால் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாது. அதைப் பிரிண்ட் எடுத்து நேரடியாக வழங்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் ஒருவர் முன்மொழிந்தால் போதும் சுயேட்சை வேட்பாளராக இருந்தால் 10 பேர் முன்மொழிய வேண்டும்.

அதேபோல் வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள், வழக்கு விபரம் போன்றவற்றை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இடங்களில் தகராறு ஏற்படாமல் இருப்பதற்காக அதிகாரிகள் மட்டத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *