
சென்னை: இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியென 4 முனை போட்டி நிலவுகிறது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு தேர்தலையும் சந்திக்கிறது. இதற்கான தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணிவரை மதுபான கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுபான கடைகளை மூட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 17 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 மாலை 6 மணிவரை மதுபான மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


