Lok Sabha Election 2024: அமித்ஷா வருகை திடீரென ரத்து.. காரணம் என்ன?

Advertisements

டிரோன் பறந்தது தொடர்பாக 3 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) விமானம்மூலம் மதுரை வந்து பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் பேச இருந்தார். இதற்காகப் பா.ஜனதாவினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வந்தனர். இதே போல் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது.

இந்த நிலையில் மதுரைக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. அதுகுறித்து கட்சியினரிடம் கேட்டபோது நிகழ்ச்சி ரத்து என்று மட்டும்தான் எங்களுக்குத் தகவல் வந்துள்ளதாகவும், வேறொரு தேதிக்கு நிகழ்ச்சி மாற்றப்படலாமெனத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பழங்காநத்தம் பகுதியில் போடப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையைப் பிரிக்கும் பணி நடந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமித்ஷா பங்கு பெற இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு மேலே டிரோன் ஒன்று பறந்துள்ளது. மேடை அமைக்கும் பணியில் இருந்தவர்கள் இதுகுறித்து கட்சியினருக்கும், போலீசாருக்கும் தெரிவித்தனர். உடனே சுப்பிரமணியபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

டிரோன் பறக்கவிட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் மதுரையை பற்றிக் குறும்படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காகப் போலீஸ் நிலையத்தில் அனுமதிக்காக விண்ணப்பித்து இருப்பதாகக் கூறி உள்ளனர். ஆனால் அமித்ஷா நிகழ்ச்சி இருப்பதால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். எனவே நள்ளிரவில் மதுரை பழங்காநத்தம் பகுதியைப் படம் எடுக்க டிரோன் பறக்க விட்டதாகத் தெரிவித்தனர். அது தொடர்பாகப் போலீசார் டிரோன் பறக்க விட்ட 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சத்தியநாராயணன், மதுரை மேலபொன்னகரத்தை சேர்ந்த நவீன்குமார், இஷாத் ஆகியோர் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, டிரோனை பறிமுதல் செய்தனர். எனவே அமித்ஷா நிகழ்ச்சி ரத்துக்கு டிரோன் பறந்த விவகாரம் காரணமாக இருக்குமா? என்று கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *