Lok Sabha Election 2024: அமைச்சர்கள் காரை வழிமறித்து முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Advertisements

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்துக்கு ,ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் காரை வழிமறித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைக் காட்டமாகப் பேசிய அமைச்சர் மெய்யநாதன்… புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்துள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலணி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான தென்னை நார் கழிவு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டு தேர்தலைச் சந்திக்க இருக்கும் இப்பகுதியில் வாக்குச் சேகரிப்பதற்காகத் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பாச்சிக்கோட்டை பகுதிக்கு வாக்கு சேகரிக்க வருகை தர இருந்தனர்.

இந்தச் சூழலில், இன்று காலைத் தென்னை நார் கழிவு ஆலையை அகற்றா விட்டால் தாங்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும், எந்தக் கட்சியினரும் வாக்குச் சேகரிக்க தங்கள் பகுதிக்கு வர வேண்டாம் எனவும் ஆதிதிராவிடர் காலணி பகுதி பொதுமக்கள் ஆலங்குடி – தஞ்சாவூர் சாலையில் வைத்துள்ள பதாகை அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பாச்சிக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரிக்க கட்சியினருடன் வருகை தந்தனர்.

அப்போது சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்கு சேகரிக்க தங்கள் பகுதிக்கு வரக் கூடாது காரை மறித்துள்ளனர்.

இதனையடுத்து காரிலிருந்து இறங்கிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில் அமைச்சருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்நிகழ்வை செய்தியாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருப்பதை பார்த்த அமைச்சர் மெய்யநாதன், செய்தியாளர்களைச் செய்தி சேகரிக்க கூடாது காட்டமாகத் தெரிவித்தார். மேலும் கட்சியினரிடம் செய்தியாளர்களின் செல்போனை பறிக்க உத்தரவிட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்காமல் புறப்பட்டுச் சென்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் தென்னை நார் கழிவு ஆலையை அகற்றா விட்டால் தாங்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் என்று பொதுமக்கள் கூறியும், அதற்குத் தீர்வு காணாமல் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகச் செயல்பட்டு வரும் மெய்யநாதன் அந்தப் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றது பிரச்சனைக்குரிய விவகாரமாக மாறி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *