
புதுடெல்லி:கடந்த மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்த 266 தொகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 266 தொகுதிகளில் தேசிய சராசரி அளவைவிட வாக்குப் பதிவு சரிந்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை ஒட்டி அந்தத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் நகர சபை அதிகாரிகளின் கூட்டத்தைத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூட்டி இருந்தார்.
இந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.
இதுகுறித்து அந்த மாநாட்டில் பங்கேற்ற தோ்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
2019 மக்களவைத் தோ்தலில் 215 கிராமப்புற தொகுதிகள் மற்றும் 51 நகா்ப்புற தொகுதிகள் என மொத்தம் 266 தொகுதிகளில் மிகக் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
வட மாநிலங்கள்
குறிப்பாக, பீகாா், உத்தர பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், தெலங்கானா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய சராசரியான 67.40 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் அதிகாரிகளுக்கு மாநாட்டில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
‘வாக்காளா்களிடையே வாக்குப் பதிவுகுறித்த விழிப்புணா்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், ஒவ்வொரு பகுதிகளுக்கும் குறிப்பாக நகா்ப்புறங்கள் மற்றும் கிராமப்புற வாக்காளா்களைக் கவரும் வகையில் வெவ்வேறு விதமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச் சாவடி அளவிலான திட்டமிடலை வகுக்க வேண்டும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தனா்.
தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் குறைவான ஓட்டுகள் பதிவாகி இருந்ததை பார்க்க முடிந்தது. நகர பகுதியான காந்தி தாம் தொகுதியில் 48.14 சதவீதம் அளவுக்கு வாக்குப்பதிவு குறைந்து இருந்தது என்றும் நகரப் பகுதிகளைவிடக் கிராமங்களில் அதிக அளவு வாக்குகள் பதிவாகி இருந்ததால் தெரிவித்தார்.

