
புதுடெல்லி:தேர்தலில் வெற்றியை நோக்கமாகக் கருதாமல் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே பல “தேர்தல் மன்னர்”கள் போட்டியிட்டு வருகிறார்கள். அவர்களின் “நம்ம தமிழ்நாட்டின்” மேட்டூரை சேர்ந்த பத்ம ராஜன் 238 முறை தோல்வியைத் தழுவி முதலிடத்தில் இருக்கிறார்.
மீண்டும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அவர் களம் காணுகிறார்.
கேப்பத்மராஜனின் தேர்தல் பயணம் கடந்த 1988 ஆம் ஆண்டு தொடங்கியது. வெற்றி பெறுவது அவருடைய நோக்கம் அல்ல. பங்கேற்பது தான் முக்கியம் என்கிறார் அவர். சாதாரணமான ஒரு குடிமகன் ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபட முடியும் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பாக ஒவ்வொரு தேர்தலையும் அவர் எதிர் கொள்கிறார்.
அவர் எதிர்த்துப் போட்டியிடாத முக்கிய பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். வாஜ்பாய் தொடங்கி தற்போதைய பிரதமர் மோடி மற்றும் மன்மோகன் சிங் போன்ற அகில இந்திய அளவிலான தலைவர்களை எதிர்த்தும் அவர் போட்டியிட்டு இருக்கிறார்.
மேட்டூரில் டயர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார் இந்தப் பத்மராஜன். தொடக்கத்தில் பலருடைய கேலிக்கு ஆளான அவர் “அரசியல் அனைவருக்கும் ஆனது” என்பதை இந்த உலகத்திற்கு காட்ட முடிவு செய்தார் பத்மராஜன். “அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றியைத் தேடுகிறார்கள். ஆனால் நான் அப்படிப்பட்டவன் அல்ல” என்கிறார், அடர்த்தியான கட மீசையுடன் காட்சி அளிக்கும் பத்மராஜன்.
வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் பொது தேர்தலில் தமிழகத்தின் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அவர் களம் இறங்குகிறார். ஜனாதிபதி தேர்தலிலும் அவர் போட்டியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. “வெற்றி என்பது இரண்டாம் பட்சம் தான். எதிர் வேட்பாளர் யார் என்பது பற்றியும் தனக்கு கவலை இல்லை” என்று சொல்லும் பத்மராஜனின் தற்போதைய முக்கிய கவலை என்ன தெரியுமா? தனது தோல்வி நீடிக்க வேண்டும் என்பதுதான்.
லிம்கா சாதனை புத்தகத்தில் இந்தியாவில் அதிகம் தோல்வி அடைந்த வேட்பாளராக இடம் பெற வேண்டும் என்பதுதான் இப்போது அவருடைய நோக்கமாகும்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வேட்பு மனு கட்டணமாகச் செலவு செய்து இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு மேட்டூரில் சட்டமன்றத் தேர்தலில் நின்ற பத்ம ராஜனுக்கு 6273 வாக்குகள் கிடைத்தது. இந்த அளவுக்கு வாக்கைத் தான் எதிர்பார்க்கவில்லை என்கிறார் பத்மராஜன்.
பேட்டியின் இறுதியாக அவர் கூறியது தான் முத்தாய்ப்பு. “கடைசி மூச்சு வரை தேர்தலில் போராடிக் கொண்டே இருப்பேன். ஆனால் வெற்றி பெற்றால் அதிர்ச்சி அடைந்து விடுவேன்..எனக்கு மாரடைப்பு வந்துவிடும்” என்று கூறியபடி அவர் சிரித்தார்.
தமிழ்நாட்டில் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிட்டும் பத்மராஜன் தோல்வி அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தின் இந்தைரை சேர்ந்த பரமானந்த் தோலானி என்பவர் 18 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். அவருடைய தந்தையும் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் மறைவுக்கு பிறகு போட்டியைத் தொடரும் அவர் தங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் எம்பி அல்லது எம்எல்ஏ ஆகும் வரை போட்டி தொடரும் என்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் கோடேகர், இதுவரை 24 முறை தேர்தலில் தோல்வியைச் சந்தித்து இருக்கிறார். முன்னாள் மாநில அரசு ஊழியரான அவர் ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு பெயர்களில் போட்டியிட்டு இருக்கிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரான ரவீந்தர் உப்புலா என்பவர் கடந்த 2014 முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் இந்த மக்களவைத் தேர்தலிலும் அவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
பத்ம ராஜனையேமிஞ்சியவர்
உத்திரபிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்த காகா ஜோகிந்தர்சிங் என்பவர் நமது பத்ம ராஜனை மிஞ்சி விட்டார். 300 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 1998 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

