
உலகின் மிகவும் விலை உயர்ந்த நாயை ரூ.50 கோடிக்கு பெங்களூருவை சேர்ந்த சதீஷ் என்பவர் வாங்கி உள்ளார். இந்த அரிய வகை நாய்க்கு கடபாம்ப் ஒகாமி என பெயர் சூட்டியுள்ளார்.
செல்லப்பிராணிகள் வளர்க்க விரும்புவோரின் முதல் சாய்ஸ் நாய்கள் தான். நாய் வளர்ப்பை, மிகுந்த ஆர்வத்தோடு செய்பவர்கள் பலர் உண்டு. அந்த வகையில், உலகின் மிகவும் விலை உயர்ந்த நாயை ரூ.50 கோடிக்கு பெங்களூருவை சேர்ந்த சதீஷ் வாங்கி அசத்தி உள்ளார்.நாய்களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்து வந்த இவர், இந்தியன் டாக் பிரீடர்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது இனப்பெருக்கம் செய்வதை நிறுத்தி விட்ட இவர், நாய் கண்காட்சிகளை நடத்தி கணிசமான தொகையை சம்பாதிக்கிறார்.
ஓநாய் போல தோற்றமளிக்கும் இந்த அரிய வகை நாய்க்கு கடபாம்ப் ஒகாமி என பெயர் சூட்டியுள்ளார். குறிப்பிட்ட இந்த நாய், குளிர் பிரதேசமான ரஷ்யா, ஜார்ஜியா நாடுகளை தாயகமாக கொண்டது. அடர்ந்த முடி கொண்டது. வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான திறன் கொண்டது என்பதால், ஐரோப்பிய நாடுகளில் இந்த நாய் வகை பிரபலமானது.
