Alangudi Town Panchayat: பேரூராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு!

ஆலங்குடிபேரூராட்சிக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை பல ஆண்டுகளாக இரும்பு கேட் வைத்து அடைத்து ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளரிடமிருந்து வருவாய்த் துறையினரும் பேரூராட்சி அதிகாரிகளும்  ஆக்கிரமிப்பை   மீட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 8வது வார்டில் ஆலங்குடி பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இரும்பு கேட் அடைத்து பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் பலமுறை ஆக்கிரமிப்பை அகற்ற தனிநபருக்கு அறிவுறுத்தியும் அவர் ஆக்கிரமிப்பு அகற்ற முன் வராததால் ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரையிலான காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஆனால் இன்று வரை சம்பந்தப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றாததால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடைபெற்றது. குறிப்பாக ஆலங்குடி வட்டாட்சியர் பெரியநாயகி தலைமையிலான வருவாய்த் துறையினரும் பேரூராட்சி அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அந்த ஆக்கிரமிப்பில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டை இயந்திரம் மூலம் ஒவ்வொரு கம்பிகளாக அறுத்து எடுக்கப்பட்டு பின்னர் டிராக்டர் மூலம் அந்த கம்பிகள் ஏற்றி செல்லப்பட்டது. மேலும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் போது ஆக்கிரமிப்பாளர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இருப்பினும் அதை பொறுப்பெடுத்தாத அதிகாரிகள் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றினர்.

மேலும் பல லட்சம் மதிப்புள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை பல ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து காவல்துறையினர் பாதுகாப்போடு வருவாய்த்துறையினரும் பேரூராட்சி அதிகாரிகளும் அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்றி பேரூராட்சி இடத்தை மீட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *