
குடிபோதையில் அலப்பறை செய்த வாலிபரைக் கட்டையால் வெளுத்து வாங்கிய பொதுமக்கள் அவரைப் போலீசிடம் ஒப்படைத்தனர்.
அப்போது கைக்கால்கள் கட்டப்பட்டு தரையில் படுத்திருந்த நபரைத் தனது பங்கிற்கு பூட்ஸ் காலால் மிதித்த போலீசால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
குன்றத்தூர் அடுத்த குழாய் தெரு பகுதியில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் அந்தப் பகுதி மக்களிடையே தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கினார்கள். மேலும் அந்த நபர் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கைகளில் கிடைத்த கட்டைகளைக் கொண்டு சரமாறியாகத் தாக்கினார்கள். அப்போதும் குடிபோதையில் அந்த நபர் விடாமல் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரின் சட்டை கழற்றி விட்டுக் கை, கால்களைக் கட்டி போட்டனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கை, கால்கள் கட்டப்பட்டு தரையில் படுத்திருந்த நபரைத் தாக்கி விட்டுத் தனது பங்கிற்கு ஷூ அணிந்த கால்களால் அந்த நபரின் கை, கால்கள்மீது நீண்ட நேரம் ஏறி நின்றார்.
அப்போதும் அந்த நபருக்குக் குடிபோதை தெளியாததால் பொதுமக்களிடம் புகாரைப் பெற்று கொண்டு அந்த நபரைப் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் தாக்கிய நிலையில் போலீசார் தனது பங்கிற்கு பூட்ஸ் காலால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

