Kumbakkarai Falls: 6-வது நாளாகத் தடை!

தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலா பயணிகளுக்கு 6-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்குக் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து நீர்வரத்து கிடைக்கிறது. இங்குத் தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 12-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் 6-வது நாளாக இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்குக் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *