
குஜராத் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகில் இருந்து வீசப்பட்ட 1800 கோடி ரூபாய் மதிப்பிலான 300 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப் பொருளைக் கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலப் பயங்கரவாதத் தடுப்புப் படையினருடன் கடலோரக் காவல்படை இணைந்து தெற்குக் குஜராத், வடக்கு மகாராஷ்டிரக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருளைக் கொண்டுவந்த படகில் இருந்தவர்கள் அதைக் கடலில் போட்டுவிட்டுப் பன்னாட்டுக் கடல் எல்லையை நோக்கித் தப்பிச் சென்றனர். கடலோரக் காவல்படையினர் விரட்டிச் சென்றும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அந்தப் படகில் இருந்து கடலில் வீசப்பட்ட 300 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைக் கைப்பற்றி அதைப் போர்பந்தருக்குக் கொண்டு சென்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 1800 கோடி ரூபாயாகும் என்று கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கடலோரக் காவல்படையின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் கும்பலை வேருடன் அழிப்பதில் மோடி அரசு கடுமையாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
