
வளரிளம் பெண்களுக்குக் கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் எச்.பி.வி. தடுப்பூசி போடும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்துள்ளார்.
14 வயது முதல் 55 வயது வரையுள்ள பெண்களுக்கு ஒருவகை வைரஸ் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதற்குப் பெண்கள் பூப்படையுமுன்பே எச்.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசித் திட்டம் உலகின் 160 நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் 14 வயதுள்ள சிறுமியருக்கு ஆண்டுதோறும் ஒரு கோடியே 15 இலட்சம் பேருக்கு எச்.பி.வி. தடுப்பூசியை இலவசமாகப் போடுவதற்கு மத்திய அரசின் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
நாலாயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்தத் தடுப்பூசியை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி போடும் திட்டத்தை இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். அப்போது 14 வயதுள்ள வளரிளம் பெண்களுக்கு எச்.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அந்தச் சிறுமியரிடம் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மொத்தம் 16 ஆயிரத்து 680 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன் புதிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவை நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், மின்னாற்றல், தொழில்துறை உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் அடங்கும். இந்த விழாவில் இராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



