கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயிலில் புதிய மாற்றம்.!

கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலித்து, இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தகுந்த அறிவுரைகளை நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு வழங்கக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூருக்கும், கோவில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ தட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற 20 இலட்சம் மக்கள் தொகை என்னும் அளவுகோலைக் கொண்டிருந்தால் ஆக்ரா, இந்தூர், பாட்னா நகரங்களில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுப்பது ஒரு தடையாக இருக்காது என்று உறுதியளித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் இரு மாநகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துருவைத் திருப்பியனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவைப்பட்டால் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கத் தமது குழுவுடன் தில்லியில் பிரதமரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு திட்டங்களும் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் கலாச்சார மையத்தை உள்ளடக்கியது என்பதைக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *