
புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை திருக்கோவிலில், தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு, கர்நாடக மாநிலம் மங்களுரு சென்றார். அங்கிருந்து புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு, சாலை மார்க்கமாக சென்று, கோவில் வளாகம் வந்தடைந்த முதலமைச்சர் ஜோசப்விஜய்யை, கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து, அர்ச்சகர்கள் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். கோவிலுக்குள் செல்லும்போது முதலமைச்சர் ஜோசப்விஜய், அவரது பாதுகாவலரும் மேல்சட்டை அணியாமல் சென்றனர். அதன் பின்னர் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் ஜோசப்விஜய், கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள இரண்டரை அடி நீள வெள்ளி வாளை காணிக்கையாக முதலமைச்சர் ஜோசப்விஜய் அளித்தார்.
அதன் பின்னர் விஜய் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். தமிழக அரசியலில் பெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் முதலமைச்சராக இருந்தபோது, கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




